இது ஒரு இயக்கம்;
"அக்னி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ "
வளமான தமிழகம்
சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்ட ஓர் இயக்கம். இந்திய நாடு வல்லரசாகும்பொழுது, தமிழகம் உலகத்திற்கே ஓர் நல்ல எடுத்துக்காட்டான மாநிலமாக விளங்கவேண்டும் என்ற நோக்கத்தை குறிக்கோளாக கொண்ட ஓர் இயக்கம்.
வளமான தமிழகத்தை முதலில் வரையறை செய்வோம்.
சமூக ஏற்றத்தாழ்வுகள் குறைந்த, வறுமைக்கோடு மறைந்த, சாதி சமய வேறுபாடுகள் இல்லாத, சுகாதாரமிக்க சுற்றுப்புற சூழ்நிலைகளில், அனைத்து தொழில்களும் தழைத்து ஓங்கிட, இயற்கை வளங்களில் தன்னிறைவோடும், நகர கிராமங்கள் சிறப்பான உள்கட்டமைப்போடும், மக்கள் 100 % கல்வியறிவோடும், அனைத்து கலைகளும், படித்தவர்களும், பண்பாளர்களும் போற்றப்படும் தமிழகமே - வளமான தமிழகம். கீழ்கண்ட சந்தேகங்கள் உடனே எழும்.
"வளமான தமிழகம் கற்பனைக்கு உகந்தது. ஆனால் நடைமுறைக்கு ஏற்றது அல்ல."
"படிப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது. ஆனால், இப்பொழுது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் இதெல்லாம் சாத்தியமில்லை."
"நமக்கிருக்கும் அன்றாட தேவைகளில், இதற்கெல்லாம் நாம் என்ன செய்ய முடியும்."
இவையனைத்தும் நியாயமானவை. சில மணித்துளிகள் யோசித்து பாருங்கள்.நம் ஒவ்வொருவரின் கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்கு முந்தைய வாழ்கையையும் (Life) வாழ்க்கை முறையையும் (Life Style) தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். கண்டிப்பாக தனி மனித வருமானம் உயர்ந்து இருக்கிறது. வேலைவாய்ப்புக்ள பெருகி இருக்கிறது. சிற்றுந்து (Car), கைபேசி (Cell Phone), தொலைக்காட்சி(TV) போன்ற பலபொருட்கள் நம்வாழ்க்கை முறையை மாற்றியமைத்து இருக்கின்றன.
ஆனால் இவற்றுள்ளும் பல தீமைகள் மறைந்திருக்கின்றன. இவை தவிர, நம் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கிறது.
-குளிக்க நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை
-தங்குதடையில்லா மின்சாரம் இல்லை (சென்னை தவிர)
-குண்டும் குழியுமான சாலைகள் (தேசிய நெடுஞ்சாலை தவிர)
-கலப்படம் நிறைந்த உணவுப்பொருட்கள்
-சமையல் எரிவாயு தட்டுப்பாடு
-காய்கறி, பலசரக்கு பொருட்களின் விலையேற்றம்
-சாலைகளில் சீறிப்பாயும் கட்டுப்பாடற்ற வாகனங்கள்
-மாசுபட்ட காற்று
-கொசுத்தொல்லைஉண்மை:
இன்றைய தமிழகத்தில் பணம் சம்பாதிப்பது ஓரளவு எளிது. ஆனால், அன்றாட வாழ்க்கையை நடத்துவதுதான் கடினம். பலதரப்பு மக்களும், அவர்களின் தேவைகளுக்கேற்ப இந்த பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
கீழ்தட்டு மக்களின் துன்பங்களை சொல்லி மாளாது.
-விலைவாசி உயர்வு
-அனைத்திற்கும் அரசாங்கத்தை சார்ந்திருக்கும் நிலை
-கல்வியறிவின்மை
-சுகாதாரமற்ற சுற்றுப்புறம்மேல்தட்டு மக்களோ!
-கட்டுப்பாடற்ற வாகனப்போக்குவரத்து, மாசுபட்ட சுற்றுப்புறங்கள், சுகாதாரக்குறைவு
நடுத்தர வர்கத்தினரோ!
-சமையல் எரிவாயு தட்டுப்பாடு
-பெட்ரோலிய மற்றும் அனைத்து பொருட்களின் விலை உயர்வு
-கொசுத்தொல்லை
-தடையோடு வரும் மின்சாரம்
-அசுத்தமான குடிநீர்
இந்த எதிர்மறையான ஒரு சூழ்நிலைக்கு காரணம் என்ன? அதாவது வருமானம் இருக்கிறது. ஆனால் நிம்மதியான வாழ்க்கை முறை இல்லை. இது ஏன்? வருமானம் உயர்ந்ததற்கு காரணம்,1991ல் மத்திய அரசாங்கம் மேற்கொண்ட உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகளின் நல்ல விளைவு. ஆனால் நம் அன்றாட பிரச்சனைகள் பெரிதளவு மாறாமல் இருப்பதற்கு காரணம், இந்த கொள்கைகளினால் சமுதாயத்தில் நடக்கும் நல்ல மாற்றங்களுக்கேற்றவாறு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சரியான திட்டங்கள் மேற்கொள்ளாததுதான்.
அதாவது தொலைநோக்கு பார்வை (vision) இல்லாததுதான்.
தொலைநோக்கு பார்வை இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதற்கு, இன்று தமிழகத்தில் நடக்கும் மின்சார தட்டுப்பாடே முக்கிய எடுத்துக்காட்டு.
இந்திய பொருளாதாரமும், அதனால் தமிழகப்பொருளாதாரமும் நல்ல வளர்ச்சியை கடந்த 6 வருடங்களில் கண்டிருக்கிறது.
மக்களின் வருமானம் பெருகி கொண்டிருக்கிறது
-அதனால் மக்கள் பலவிதமான மின் சாதனங்களை வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள்.
-தொழில் வளர்ச்சிகொண்டு வெளிநாட்டு முதலீடுகள் நடக்கின்றன.
மேலும்,
இதை நாம் ஆராயலாம். இதைப் போன்று பல விசயங்களை, பல துறைகளிலிருந்து எடுத்துக்காட்டலாம். இதற்கெல்லாம் தீர்வு நம்மிடமே இருக்கிறது.
ஆம்! இவ்வளவு ஆழமாகவும், அகலமாகவும் ஒரு துறையைப்பற்றி விமர்சனம் செய்ய நமக்கு தெரியும்.
அல்லது
இந்த விமர்சனத்தை பற்றி படிக்கும் பொழுது புரிந்து கொள்ளவும் தெரியும்
அல்லது
ஆம்! இங்கேதான் தவறு நடந்திருக்கிறது என்று கண்டறியவும் தெரியும்
அல்லது
எல்லாவற்றிற்கும் மேலாக இதற்கு தீர்வை கொடுத்து மின்சாரத் துறையையே மாற்றி அமைக்கவும் தெரியும் இந்த கூற்றை நாம் அனைவரும் நெஞ்சை நிமிர்த்தி சற்று திமிரோடும் கூறலாம் ஏனென்றால்,
"வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு."
இந்திய நாட்டை அணு ஆய்தங்கொண்ட நாடாக மாற்றிய மேதை, அப்துல்கலாமை தந்த தமிழ்நாடு,
இந்திய நாட்டின் பசுமை புரட்சிக்கு காரணமான திரு.M.S.சுவாமிநாதனை தந்த தமிழ்நாடு. அதனால் இதைப்போன்று பல வல்லுநர்களும், அதிகாரிகளும், பண்பாளர்களும், நிறைந்து இருக்கிறார்கள்.எண்ணங்கள் பல இருக்கலாம்!
திட்டங்கள் பல போடலாம்!
அதை நாம் எவ்வாறு செயல்படுத்துவது. நாம் பொதுசனம் தானே!
-----------------------------------------தீர்வை தேடுவோம்.
வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்றால், அரசாங்கம், அதிகாரிகள, நீதித்துறை, பத்திரிகைகள் மற்றும் பொது மக்களாகிய நாம் அனைவரும் அந்த குறிக்கோளை நோக்கி உழைக்க வேண்டும். மேற்கூறிய 5 பங்காளிகளில் எந்த ஒருவரும் மற்றவரை குறைகூறி கொண்டு இதை உருவாக்க முடியாது. இன்று தமிழக்தில் நடந்து கொண்டு இருப்பது குறை கூறுவது மட்டும். நாம் அரசியல் வாதிகள் செய்வது தவறு என்கிறோம். பத்திரிகைகள் நம்மையும் தவறு என்கிறது, அரசியலையும் தவறு என்கிறது. நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த 5 பங்காளிகளும் எந்த பந்தை எவ்வாறு செய்தால் வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்று வரையருத்து காட்டுவதுடன் நம்மால் ஆன செயல்களையும் செய்யப்போகிறது. பொது மக்கள் முழுநேரமாகவும் அல்லது தங்களது அன்றாட வாழ்கைக்கிடையே சில துளி நிமிடங்களை மட்டும் இந்த நோக்கத்திற்காக அற்பணித்து இந்த இயக்கத்தில் பங்கு பெறலாம், எவ்வாறு, என்ன, எப்படி பங்காற்ற வேண்டும் என்பதை வரும் நாட்களில் நாம் பார்க்கலாம்.
ஆனால் 3 விஷயங்களை உறுதியாக கூற முடியும்.
1. இந்த இயக்கம் லாப நோக்கம் அற்றது
2. உங்களுடைய நேரத்தை உங்கள் அனுமதியின்றி எடுத்துக்கொள்ளாது
3. வளமான தமிழகம் மட்டுமே இதன் குறிக்கோள் நண்பர்களே!
மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் ஒரு சின்ன தீப்பொறி மட்டுமே.
இவையனைத்தும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்றை பதம் பார்த்தது போல்
-வளமான தமிழகம் மேலும் வளரும்
-உங்களுடைய கருத்துக்களை கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள்
-தங்கள் கருத்துகளின் தூய்மை பாதுகாக்கப்படும்.
karuthu@valamaanatamizhagam.com